Saturday, January 24, 2009

ஏன் இன்னும் வரவில்லை ?

சொந்தமொழிச் செந்தமிழிலில்
சொக்கிவிளை ஆடிவரும்
சந்தமணிக் கவிதையென ச்
சளைக்காமல் ஓடிவரும் ,

எந்தன் மகராணியவள்
ஏன் இன்னும் வரவில்லை ??

முத்துமணிப் பெட்டகமாய்
முல்லைப்பூ நித்திலமாய்
கத்துங்கிளிச் சொல்லழகில்
கவிதை மொழி கூறவரும் ,

எந்தன் மகராணியவள்
ஏன் இன்னும் வரவில்லை ??

கார்கால மேகமெனக்
கலைந்தாடும் கூந்தலிலே !
சேர்ந்தாடும் முல்லையுடன்
சாய்ந்தாடி வந்துவிடும் ,

எந்தன் மகராணியவள்
ஏன் இன்னும் வரவில்லை ?

வில்லாக வளைகின்ற
பொல்லாத புருவத்தில்
சொல்லாதகதை சொல்லிச்
சொக்கவிடும் பூங்குயிலாம்,

எந்தன் மகராணியவள்
ஏன் இன்னும் வரவில்லை ?

மெய்யான காதலினை
எந்நாளும் மறக்காமல்
பொய்யான கோபமுடன்
போவென்று எனை யுரைக்கும் ,

எந்தன் மகராணியவள்
ஏன் இன்னும் வரவில்லை ?

ஆதவனைப் போவென்று
தோதாகக்கூறியிந்த க்
காதலனைக் கைப்பிடிக்க
ஆசையுடன் ஓடிவரும் ,

எந்தன் மகராணியவள்
ஏன் இன்னும் வரவில்லை ?

No comments:

Post a Comment