Thursday, January 22, 2009

தாமரை /வெண்ணிலா

வெண்ணிலவு >

தண்ணீரில் ஆடுகின்ற தாமரையே
தங்கமென மின்னுகின்ற பொன்மலரே
புன்னகையைத் தேடுகின்றேன் உன் முகத்தில்
கண்ணீரால் வாடுகின்றேன் உன் நினைவில்
பொன்மீனே என்னருகே வாராயோ !
முகமலர்ந்த புன்னகையைத் தாராயோ
ஆதவன்தான் உன் அழகுக் காதலனோ ?
ஆதரிக்க உன் முகத்தில் புன்னகையோ !
பாதகனாம் பாவியவன் பேரழகோ !
பார்த்ததுமே சிரிப்ப தற்கு மன் மதனோ !
ஏனடியோ எனை மறந்து ஓடுகிறாய்
பாராமல் ஏன் முகத்தை மூடுகின்றாய் ?
கூறடியோ இன்றிரவே சாகின்றேன்
காலடியில் தலை போட்டு வீழுகின்றேன்
இல்லையடி என்வாழ்வில் இன்பங்கள்
தொல்லையடி உன் நினைவால் துன்பங்கள் !!

தாமரை >

வான் வெளியில் நடை போடும் சந்திரனே !
என் மனதில் இருப்பதெல்லாம் உன் நினைவே !
தண்ணீரில் உனக்காக தவமிருந்தேன்
தள்ளாடும் உன் நினைவால் எனை மறந்தேன் !
கண்ணாலே கண்டதும் காதல் கொண்டேன்!
சொல்லாமல் வெட்கத்தால் தலை குனிந்தேன் !!
பகலிலே காணாமல் வாடுகின்றேன்
புன்னகையில் வரவேற்க தேடுகின்றேன்
என் நினைவில் சத்தியமாய் யாருமில்லை
நீயின்றி நித்தமும் தூக்கமில்லை
நேர் நின்று பாரார்கள் தன் துணையை
பாரதத்தில் வாழுகின்ற பெண் மயில்கள்
என்கின்ற காரணத்தால் தண்ணீரில்
எந்நாளும் காணுகிறேன் உன் முகத்தை !!

No comments:

Post a Comment