Tuesday, February 3, 2009

பாவேந்தன் பார்வை !

முத்தமிழ வீதியிலே மிதந்துவரும் கவிதையென ப்
பத்திரமாய் வந்துவிட்டேன் இங்கு இங்கு -வந்து
சித்திரமாய் வானமதில் சேர்ந்து விளையாடும் முகில்ச்
சங்கெடுத்து ஊதுகிறேன் அங்கு அங்கு !!

ஊதுகிற சங்கினிலே செந்தமிழை நாதமெனச்
சேர்த்தபடி ஊதுகிறேன் பாட்டு பாட்டு -அது
பகுத்தறிவு பண்புதமிழ் என்று தினம் பாடுகிற
பாவேந்தன் பாடல்களைக் கேட்டு கேட்டு !

பட்டுவண்ணச் சிறகினிலே பறந்துவரும் கொக்குயெனப்
பாய்ந்து வரும் என்கவிதைப் பாட்டு பாட்டு -பாவேந்தன்
கொட்டித்தந்த செந்தமிழத் தொட்டிலிலே தூங்குகிற
பட்டுமனம் எழுதிவிட்ட சீட்டு சீட்டு !!!

வானரத வீதியிலே வரைந்து வைத்த ஓவியமாய்ப்
போனதம்மா என்கவிதை நெஞ்சம் நெஞ்சம் -தமிழ்
கானம் பாடும் மேடையிலே கவிதைபாட என்மனது
போனபோது மாறியது கொஞ்சம் கொஞ்சம் !

பாட்டெழுதும் பாதையிலே நாட்டுயர்வை எழுதாத
கவிஞன் உலகில் இல்லையெனக் கூறு கூறு -அவன்
நாட்டுயர்வை எழுதெழுதப் பாட்டுலகப் புதுப்பூவில்
பொங்குமன்றோ தேன்கவிதைச் சாறு சாறு !!

சின்னச்சிறு கண்மணியே சிரிக்கின்ற பொன்மலரே
பாவேந்தன் பாடலைநீ பாடு பாடு -தமிழ்
பொன்னருவி சிந்துகிற புதுப்பாடல் நீபாடி
புதுவாழ்வை நோக்கி நீயும் ஓடு ஓடு !

முத்தையொத்த வார்த்தைகளால் முழுமனிதன் ஆவதற்கு
இலக்கணமே வகுத்து வைத்தான் அன்று அன்று -அந்த
முத்துவரிக் கவிதைகளை முழுவதுமாய்ப் படித்துவிட்டால்
சிறக்குமன்றோ உன் வாழ்வும் நன்று நன்று !

இமயம் முதல் குமரிவரை குளித்துவரும் தென்றலிலே
தமிழ்த் தேனைக் கலக்கிச்சொன்னான் கவிதை கவிதை -தீய
சாதிஎன்றும் சமயம் என்றும் பேசுகின்ற பொய்யர்களை
மிருகமென்று சொல்லச்சொன்னான் அவனை அவனை !

தட்டுத்தடுமாறி அவன் காதல் பாட்டைப் பாடிவிட்டால்
கிட்டவந்து நின்றுவிடும் சொர்க்கம் சொர்க்கம் -அவன்
சினந்தவிழிப் பார்வையிலே சின்னக்கவி சொன்னாலும்
கண்டபடி தட்டிவிடும் முரசம் முரசம் !

கட்டிவைத்த கோவிலிலே சாமியில்லை வெறுங்கல்லாம்
வெட்டிச்செலவு செய்யாதே என்றான் என்றான் -நமது
மெயயறிவே தெய்வமென்று முத்தமிழக் கவிசெய்து
மூடமனப் பழக்கமதை வென்றான் வென்றான் !

மானமில்லா மனங்களையும் ஈனகுண மனிதனையும்
தேன் கவிதைப் பாட்டாலே கொன்றான் கொன்றான் -மது
பானமதில் மூழ்கிவிட்ட மடையர்தமைத் திசை மாற் றி
மானமுடன் வாழவழி சொன்னான் சொன்னான் !

கானமழை பொழியுமந்த காளையவன் கவிதைகளை
அனுதினமும் நாம்பாடம் செய்வோம் செய்வோம் -அவன்
சீர்திருத்தக் கவிதைகளை நாடுயர நாம் பாடி
சீர்திருந்தி வாழ்க்கையிலே உய்வோம் உய்வோம் !

வடிகின்ற தேன்போல இனிக்கின்ற தமிழ் மொழிக்கு
ஈடுஇணை ஏதும் இங்கு இல்லை இல்லை -அது
இல்லைஎன்று சொல்லிவிட்டு இருட்டறையில் நாமிருந்தால்
வடக்கிருந்து வந்துவிடும் தொல்லை தொல்லை !

பெண்மைநிலை உயர் வதற்கும் கைம்மை நிலை மறைவதற்கும்
கருணையுடன் பொன்கவிதை சொன்னான் சொன்னான் -வாழ்க்கை
உண்மைதனை உணர்ந்துநிதம் தன்மையுடன் வாழ்வதற்கு த்
தன்மானக் கருத்துகளை ச் சொன்னான் சொன்னான் !

சுற்றமுடன் நீயெழுந்து குற்றங்களை நேர்நிறுத்தச்
சிங்கமெனத் தமிழா நீ சீறு சீறு -என்றும்
சீற்ற மிகு சொல்லெடுத்துச் சிங்காரக் கவிதொடுத்து
சீர் திருத்தம் செய்யச்சொன்னான் பாரு பாரு !

அடுப்பூத மட்டுமின்றி அரசாள வருவதற்கு
அச்சமின்றி நடைபோடு பெண்ணே பெண்ணே -நீ
இடுப்போடு குடமெடுக்க மட்டுமல்ல என்றென்றும்
படிப்போடு பாராளு பெண்ணே பெண்ணே !

முத்துநகை வேண்டுமென்று பெண்பார்க்க வருவதென்றால்
முடியாது என்றுசொல்லு பெண்ணே பெண்ணே -பணப்
பித்துகொண்ட மாந்தனவன் முன்னாலே நீசென்று
முகங்காட்டி நிற்காதே பெண்ணே பெண்ணே !

சொத்துசுகம் அத்துனையும் சேர்த்துக்கொண்டு வந்தாலும்
சொந்தம்கொள்ளப் போகாதே தம்பி தம்பி -அவள்
கொண்டுவரும் சொத்துக்கெல்லாம் விலையாகிப் போவதற்கு
விலைமாடா நாமெல்லாம் தம்பி தம்பி !

கையுமுண்டு காலுமுண்டு பேரு புகழ் சேர்க்காமல்
விலையாகிப் போகாதே தம்பி தம்பி -நெஞ்சில்
பற்றுமுண்டு பாசமுண்டு வீரங்கொண்டு உயராமல்
வீணாகிப் போகாதே தம்பி தம்பி !

காசுபணம் தேவையில்லை அன்புமட்டும் போதுமென்று
அனைவருமே சொல்வோமா இங்கு இங்கு -நாம்
பேசுகிறசெந்தமிழை மூச்சென்று சொல்லியிங்கு
முடிப்போமா கவியரங்கை நாமும் இங்கு ?

Wednesday, January 28, 2009

ஒ -சாலினி !

சாலினி சாலினி ஒ சாலினி
சாலினி நீயினி என் தோழிநீ
ஏனஇனி தனிமையில் நீஇனி
தோழமை தான்துணை நமக்கினி!

சாலினி ...சாலினி ,ஒ சாலினி!

வாஇனி நம் மனம் ஓரணி
ஏதினி கவலைகள் நமக்கினி
சாலினி பேசிடும் தமிழ் மொழி
தானினி என் கவிப் பாட்டு இனி !

சாலினி சாலினி ஒ சாலினி .!

வானினி பெய்திடும் தேன்துளி
தேனினை தந்திடும் தேனிநீ
தேரினில் தோழமைத் தேவிநீ
பாரினில் புகழொடு வாழு நீ ,

சாலினி சாலினி ஒ சாலினி! ,

என்றுமே இல்லைநாம் தனித்தனி
ஏனெனில் என் மனத் தோழி நீ !
சாலினி சாலினி ஒ சாலினி
சாலினி நீயினி என் தோழி நீ !

Tuesday, January 27, 2009

வெந்து போவேன் !

காதலியே !
என் மீது
நெருப்பை அள்ளி வீசினால் கூட
நெகிழ்ந்து போவேன் -ஆனால்
வெறுப்பை அள்ளி வீசி விடாதே
வெந்து போவேன் !

Monday, January 26, 2009

இயற்கை! !

வண்டு வந்து உண்டுவிடச்
செண்டு மலர்த் தேனை இங்கு
கொண்டு வந்து வைத்தது யார் ஞானப் பெண்ணே ?அதைக் கண்டு நீயும் கூறிவிடு ஞானப்பெண்ணே !

இரவு வரும் வேளைதன்னில்
உறவு கொள்ள வெண்ணிலவை
வரவு செய்யச்சொன்னது யார் ஞானப்பெண்ணே?-அதை
அறிந்து நீயும் சொல்லிவிடு ஞானப்பெண்ணே !

ஆடும் அலை மேகமாகி
வானமெனும் மேடையேறிக்
கொட்டும்மழை கொட்டுவதேன் ஞானப்பெண்ணே? -அதைக்
கொட்டச் சொல்லி விட்டது யார் ஞானப்பெண்ணே !

வெள்ளி வந்து அள்ளி வீசும்
வெண்கதிரின் வேகத்திலே
அல்லி மலரும் மலர்வதுமேன் ஞானப்பெண்ணே ?-அதைச்
சொல்லி விளையாடிவிடு ஞானப் பெண்ணே!

சின்னத்துளி விந்து சென்று
பெண்ணினுடல் தங்கி நின்று
வண்ணப்பூவாய் வருவதுமேன் ஞானப் பெண்ணே ?அதை
எண்ணி நீயும் கூறிவிடு ஞானப் பெண்ணே !!

கண்ணும் கண்ணும் பார்த்துக்கொள்ள
காதல் நெஞ்சில் ஊறிக்கொள்ள
நெஞ்சம் ஏங்கித்தவிப்பதுமேன் ஞானப்பெண்ணே ?-அதைக்
கண்டு நீயும் காதல் கொள்ளு ஞானப் பெண்ணே !!

தனி மரம் !

நறுமணங்கள் வீசுகின்ற
நந்தவனச் சோலையிலே
மலர்ந்ததன்றோ நம் காதல் கண்ணம்மா -அதை
மறப்பதற்கா நாம் பெற்றோம் பொன்னம்மா ?

இரு மனங்கள் ஒன்றாகி
ஒரு மனமாய் ஆனபின்பு
தனி மரமாய்ப் போனதேண்டிதங்கம்மா -என்னைத்
தனி மரமாய் செய்ததேண்டி தங்கம்மா ?

இராக இசை பாடி வரும்
மேக மலர்ச்சோலையிலே
மோக மலர் பறித்தோமே சின்னம்மா -அந்த
மோகனத்தை ஏன் மறந்தாய் சின்னம்மா ?

கண்களிலே கவிபாடி
காதலெனும் இசை பாடி
களித்திருந்தோம் காலமதைச் சின்னம்மா -அதை
கழித்துவிட்டு ஏன் போனாய் கண்ணம்மா ?

காலமெல்லாம் அழுதழு து
கரைந்துவிட்ட என் மேலே
கருணையுடன் ஒரு பார்வை வராதா -அது
காதலெனும் இன்பமதைத்தராதா ?

அருங்காதலியே !

பவளச் சந்திரன் போலுருவாகி
அருவான்வில்லின் பாதையில் இறங்கி
தவழும் தென்றல் குளிர்ந்ததுபோலத்
தரணியில் நடந்த தளிர் மாமணியே !

திருவான் மின்னல் தருமொளியாகி
உருவாய் அமைந்த கண்களும் விளங்கக்
கருவான் மேகக் கூந்தலும் அழகின்
பேராய் அமைந்த திருமாமயிலே !!

பச்சைப் பசுமயில் போல் அழகாகி
பசும்பொன் வார்த்த மேனியளாகி
உச்சிக்கதிரவன் போல் ஒளியான
பச்சைப் பவள இளமாந்தளிரே !

வைகறைக் கதிரவன் வரவினைக்கண்டு
பொய்கையில் பூத்த புதுத்தாமரைபோல்
மெய்யாய் அழகிய மேனியைக்கொண்ட
அய்யம் இல்லா அரும்பேரழகே !

நல்லுருவாகிய செவ்விதழ் மொழியும்
வேலுருவாகிய அழகிய விழியும்
கல்லுருவாக்கும் போதையைப் பொழிய
துள்ளியே வந்த திருப் பேரொளியே !

அன்னப் பற வையின் அழகினை நினைத்து
எண்ணம் பரிமேல் எண்திசைதிரிந்து                                                                 விண்ணில் பறக்கும் என்மாமனதை
அணைத்திட வாராய் அருங்காதலியே !!

Saturday, January 24, 2009

விடியாதா?

வானமதில் வரைந்துவிட்ட கோலமிலாச் சித்திரத்தை
ஆனவரை பார்த்துவிட்டேன் காணோம் -காதல்
பானமதில் ஊறிவிட்ட எண்ணமதை நீயின்றி
எண்ணியெண்ணிப் பார்த்துவிட்டேன் காணோம் !!

இன்பமான எண்ணமதை எண்ணியெண்ணிப் பார்த்துவிட்ட
துன்பமான இவ்விரவு விடியுமோ ? என்
இன்பரதப் பொன்மயிலே உன்முகத்தைக் காணாமல்
அமைதியாகத் தூங்கவும்தான் முடியுமோ ?

காலை வரை காதலினைக் கட்டிலிலேபடுத் தெண்ணி
மூடும் விழியுள்ளும் நீ தெரிகிறாய் -அதி
காலையிலே கண்ணயரக் கனவினிலும் வந்து வந்து
ஆசையுடன் எனை ஆட்சி புரிகிறாய் !!

வெள்ளி வரப் பார்த்த ஒரு சேவல் வந்து கூவிவிட
இன்றுமென்றும் என்கவலை விடியாது ! காதல்
சொல்லுகின்ற உன் விழியின் ஓர் அசைவைப் பார்த்துவிட
ஒரு நொடியில் ஏன் கவலை விடியாது ??

ஏன் இன்னும் வரவில்லை ?

சொந்தமொழிச் செந்தமிழிலில்
சொக்கிவிளை ஆடிவரும்
சந்தமணிக் கவிதையென ச்
சளைக்காமல் ஓடிவரும் ,

எந்தன் மகராணியவள்
ஏன் இன்னும் வரவில்லை ??

முத்துமணிப் பெட்டகமாய்
முல்லைப்பூ நித்திலமாய்
கத்துங்கிளிச் சொல்லழகில்
கவிதை மொழி கூறவரும் ,

எந்தன் மகராணியவள்
ஏன் இன்னும் வரவில்லை ??

கார்கால மேகமெனக்
கலைந்தாடும் கூந்தலிலே !
சேர்ந்தாடும் முல்லையுடன்
சாய்ந்தாடி வந்துவிடும் ,

எந்தன் மகராணியவள்
ஏன் இன்னும் வரவில்லை ?

வில்லாக வளைகின்ற
பொல்லாத புருவத்தில்
சொல்லாதகதை சொல்லிச்
சொக்கவிடும் பூங்குயிலாம்,

எந்தன் மகராணியவள்
ஏன் இன்னும் வரவில்லை ?

மெய்யான காதலினை
எந்நாளும் மறக்காமல்
பொய்யான கோபமுடன்
போவென்று எனை யுரைக்கும் ,

எந்தன் மகராணியவள்
ஏன் இன்னும் வரவில்லை ?

ஆதவனைப் போவென்று
தோதாகக்கூறியிந்த க்
காதலனைக் கைப்பிடிக்க
ஆசையுடன் ஓடிவரும் ,

எந்தன் மகராணியவள்
ஏன் இன்னும் வரவில்லை ?

செல்லாக்காசு !

நான்
நாத்திகனாய் இருந்து
ஆத்திகத் தளத்துள்
அடியெடுத்து வைத்தேன் !
அப்போதாவுது
உன் பார்வை
என் மீது படாதா என்று ...

நான்
கல்லாதவன்
காவியம் படித்து
கவிதை கூட எழுதினேன்
உன்
பார்வை
அதன் மீதாவது படாதா என்று !

கல்லானவளே !
உன்னைப்
பொல்லாதவள்
என்று
புதுக் கவிதை எழுதி விட்டேன் போடி .......

அத்தோடு என்
கல்லறையில்
பொல்லாத வளிடத்தில்
செல்லாக்காசானவன்
என்றும்
எழுதச் சொல்லிவிட்டேன் !!

Friday, January 23, 2009

நான் புத்தன் இல்லை!

எப்போது போவான்
ஆதவன் என்றே
ஏங்கித் தவித்த நிலவு
எழுந்து வந்தது
அந்த வேளை !
அந்தி வேளை !!


இரவின் கைகளை
நிலவு
இறுக்கிப் பிடித்துவிட்டது !
அதனால்
அரைப் பகலாய்
அந்தி மலர்ந்தது !

அவள் வந்தாள்
ஆடி நின்றாள்
நிலவு தன் பொழிவை
அவளுக்கு
இரவல் கொடுத்து விட்டது !

தங்கம் தன் நிறத்தை
அவளுக்கு த்
தானம் கொடுத்து விட்டது !

அழகின் உச்சியே
அவள் பாதத்தை
முத்தமிடும் போது
கரையாமல் இருப்பதற்கு
என் மனது என்ன
கல்லா ?

காதலை மாற !

என்
கனவுப் படகு கவிழ்த்தபோது
நினைவுக் கைகள் -என்
நித்திரையைக் கலைத்து விட்டது !

என்
நினைவுக்கைகள் என்றும்
அவளையே தழுவிக்கொண்டிருக்கிறது !


என்
எண்ணத்திரையில்
அவள் இல்லாத ஒரு
வண்ணக்கனவு வருவதே இல்லை !

நான்
எழுதும் கவிதைகளில்
விழுதாய் அவளின்
விருப்பத்தை விதைத்தவன் !

அவளின்
நினைவில்
மனது
மாம்பழ வண்டாய்
மயங்கிக் கிடந்தது !

மயங்கிய வண்டுக்கு
மயக்கம் தெளிந்த போது
மாம்பழவித்தோ
மண்ணுள் புதைந்து விட்டது !

என் காதல் மாங்கனியாள்
நினைவில்
நான் மூழ்கியிருந்த போது ,
அவள் விலை போய் விட்டாள் !

நான்
சாவுக்கு
வர வேற்புக் கவிதை பாடி
வாயிலில் நிற்கிறேன் !
அவளோ
காதலை மறக்கக்
கடிதம் போடுகிறாள் !!

கவிதைத் தாலி !

எதுகை மோனையின்
சந்த நாதத்தில்
நான்
உனக்கு
கவிதைத்தாலி கட்டிய போதே
நீ !
என்
மனைவி ஆகிவிட்டாய் !

ஆதவன்
எழுந்த போது
கமல முகம் மலர்வதை
நீ
கண்டதில்லையா ?
அது உண்மைதான் ,
அது போல்
இந்த ஆதவனும்
உன் கமல முகத்தைக்
கண்டுதான் மலர்ந்தான் !

குயிலின்
சந்த நாதத்தைக் கொண்டுதான்
சங்கீதம் உருவானது !

ஏழு சுரங்களை
எந்த வகைப் படுத்தினாலும்
உன்இதழ்
சிந்தும் இராகத்திற்கு
இணையாகாது !!


கவிதைக் கடலில்
என்னை
தூக்கி எறிந்தவளே !
நீந்திக் கொண்டே இருப்பேன் .....
நீ !
கை கொடுத்து என்னை க்
கரை யேற்றும் வரை
நீந்திக் கொண்டே இருப்பேன் !!

இதயகணம்!

கடற்கரை மணலில்
கால் கடுக்க ஓடி ஓடி
எடையைக் குறைக்க -நான்
எடுத்துக்கொண்ட முயற் சியில்
ஓடாய் இளைத்து விட்டேன் !
எடை மட்டும் குறையவில்லை....
ஏன் என்று எண்ணிப்பார்த்தேன் -ஒ
என் இதயம் மட்டும்
உன் கணம்
கணக்கிறது !!

Thursday, January 22, 2009

தாமரை /வெண்ணிலா

வெண்ணிலவு >

தண்ணீரில் ஆடுகின்ற தாமரையே
தங்கமென மின்னுகின்ற பொன்மலரே
புன்னகையைத் தேடுகின்றேன் உன் முகத்தில்
கண்ணீரால் வாடுகின்றேன் உன் நினைவில்
பொன்மீனே என்னருகே வாராயோ !
முகமலர்ந்த புன்னகையைத் தாராயோ
ஆதவன்தான் உன் அழகுக் காதலனோ ?
ஆதரிக்க உன் முகத்தில் புன்னகையோ !
பாதகனாம் பாவியவன் பேரழகோ !
பார்த்ததுமே சிரிப்ப தற்கு மன் மதனோ !
ஏனடியோ எனை மறந்து ஓடுகிறாய்
பாராமல் ஏன் முகத்தை மூடுகின்றாய் ?
கூறடியோ இன்றிரவே சாகின்றேன்
காலடியில் தலை போட்டு வீழுகின்றேன்
இல்லையடி என்வாழ்வில் இன்பங்கள்
தொல்லையடி உன் நினைவால் துன்பங்கள் !!

தாமரை >

வான் வெளியில் நடை போடும் சந்திரனே !
என் மனதில் இருப்பதெல்லாம் உன் நினைவே !
தண்ணீரில் உனக்காக தவமிருந்தேன்
தள்ளாடும் உன் நினைவால் எனை மறந்தேன் !
கண்ணாலே கண்டதும் காதல் கொண்டேன்!
சொல்லாமல் வெட்கத்தால் தலை குனிந்தேன் !!
பகலிலே காணாமல் வாடுகின்றேன்
புன்னகையில் வரவேற்க தேடுகின்றேன்
என் நினைவில் சத்தியமாய் யாருமில்லை
நீயின்றி நித்தமும் தூக்கமில்லை
நேர் நின்று பாரார்கள் தன் துணையை
பாரதத்தில் வாழுகின்ற பெண் மயில்கள்
என்கின்ற காரணத்தால் தண்ணீரில்
எந்நாளும் காணுகிறேன் உன் முகத்தை !!

Tuesday, January 20, 2009

என்னவள்!

தத்தைமொழி பேசியென
தன்பை வாங்கிக்கொண்டவள்
உச்சிமுதல் பாதம் வரை
உன்மையன்பு கொண்டவள்
முத்தைஒத்த விழிகளிலே
மோகனத்தைத் தந்தவள்
சொத்து சுக ஆசைகளைச்
சொத்தை எனச்சொன்னவள் !!!

கள்ளல்லா விழிகளிலே
கருணை கொண்டு சிரிப்பவள்
உள்ளம் கொண்ட அன்பு தன்னில்
உலுக்கி என்னை வதைப்பவள்
எள்ளளவும் பொய்ம்மையின்றி
என்னை அணைத்து மகிழ்பவள்
சொல்லி வைக்க வார்த்தைஇல்லை
என்னவளோ உயர்ந்தவள் !

பட்டுப் போன்ற பாதமலர்
கிட்டக்கிட்ட நடந்திடும்
மெட்டிஓசை கேட்டு நெஞ்சம்
கெட்டிமேளம் கொட்டிடும்
எட்டிநின்ற எனது நெஞ்சில்
எதுகை மோனை சொட்டிடும்
திட்டம்போட நினைவுச் சொர்க்கம்
கிட்டவந்து நின்றிடும் !

Monday, January 19, 2009

நெஞ்சினைத்தா

காதல் கொண்ட நெஞ்சம் தன்னில்
வாழும் அன்பு ராணி -நான்
மோகம் கொண்டமலரே உந்தன்
அன்பில் வாழும் தேனி !

தேகம் கொண்ட அழகில் இல்லை
தேனை ஒத்த வாழ்வு -அன்பு
ராகம் கொண்ட பாட்டே உந்தன்
மனமே எந்தன் வாழ்வு !!

குழந்தை போலக்கொஞ்சி வழியும்
அன்பு கலந்த புன்னகை -அதை
கண்டு கொண்ட எந்தன் நெஞ்சில்
பொங்கி வரும் சிந்தனை !

காசு பணம் தேவைஇல்லை
கள்ளமற்ற உள்ளமே - உன்
கருணை விழி போதும் எந்தன்
வாழ்வு என்றும் மலருமே !

உன்னை அன்றி எந்தன் நெஞ்சம்
இல்லை ஒரு பெண்ணிடம் -அதை
எண்ணி எடுத்து வந்து என்னைக்
கொடுத்து விட்டேன் உன்னிடம் !!

வயது முதிர்ந்த காலம் வரப்
புதையும் உடல் மண்ணிடம் -அந்தக்
காலம் முடிந்து போகும்வரை
நெஞ்சம் இருக்கும் உன்னிடம் !!

ஏழு என்று எழுதி வைத்தான்
பிறவி வரும் கணக்கினை - அதற்கு
மேலும் ஒன்று இருக்குமெனில்
அதிலும் தாடி நெஞ்சினை !

Wednesday, January 7, 2009

கவிதையானேன்!!

என்னரும் நெஞ்சம்தன்னில்
வண்ணமாய் எந்தநாளும்
கண்ணிரு விழிகள் போல
மின்னிடும் காதல் தன்னை
திண்ணமாய் எழுதி வைத்த
கன்னியே உன்னை நெஞ்சம்
எண்ணியே கவிதை நூறை
என்றுமே எழுதி வாடும்!


சொந்தமாய் உன்னை எந்தன்
நெஞ்சிலே சூடத்தானே
பந்தமாய் வாழ்ந்த எந்தன்
நெஞ்சினை உனக்குத் தந்தேன்
காந்தமாய் இழுக்கும் உந்தன்
கருவிழிக் கவிதை கேட்டு
சந்தமாய் எழுத்தும் நல்ல
கவிஞனே ஆகிப்போனேன் !

மேகமாய் ஆடும் உந்தன்
மோகனக் குழலின் மீது
மோகமாய் ஆடும் நல்ல
மல்லிகை ஆக வந்தேன்
வேகமாய் வீசும் அந்த
வெயிலின் கொடுமை தன்னில்
தேகமே துவண்டு போகச்
சோகமாய் வாடி விட்டேன் !

அரங்கிலே ஆடும் நல்ல
மரமகள் போல நீயும்
கரங்களை அசைத்து உந்தன்
கவிதையைச் சொல்லும்போதும்
வரமென வந்த உந்தன்
வாய்மொழி கேக்கும் போதும்
மரமென விளைந்த நெஞ்சம்
பனிமலர் போல மாறும் !

கண்களில் சொல்லும் உந்தன்
கவிதையைக் கேட்கும் போது
பெண்களின் மனது கூடப்
போதையில் ஆழ்ந்து போகும்
என்னரும் காதல் நெஞ்சில்
ஊரீடும் கவிதை தன்னை
என்னிரு கண்கள் கண்டு
ஏக்கத்தில் வாடிப் போகும் !

பூக்களை போல உந்தன்
பொன்மனம் காதல் கொள்ள
வெட்கத்தில் சிவந்து போகும்
பூ முகம் காணும் போது
ஏக்கத்தில் வாடி விட்டு
தூக்கத்தை மறந்து நெஞ்சம்
பக்கத்தில் நிறைந்து போகும்
பாக்களை எழுதி வாழும் !

வில்லென வளைந்து பேசும்
புருவத்தின் அழகு கண்டா
பல்லினைக் காட்டி உந்தன்
பாதத்தில் வீழ்ந்து போனேன்
இல்லை என் இனிய ராணி
கல்லென சொல்லும் உந்தன்
நல்லரும்கவிதை கேட்டே
காதலில் ஏங்கிப் போனேன்!

இருவிழி திறந்து மெல்ல
தருகிற இன்பம் தன்னை
பெறுகிற ஆசை கொண்டா
பேதையே காதல் கொண்டேன்
உருக்கிய தங்கம் போல
உடலினைப் பெற்ற தாலோ
இருகரம் நீட்டி உன்னை
இணைத்திட நானும் வந்தேன்

கார்குழல் மறைவினின்று
கரு விழி ஆடுகின்ற
திருவிளை யாடல் தன்னை
சிறுமனம் கண்டு கொண்டு
உறவினில் ஆசை கொண்ட
பருந்தினைப் போல காமச்
சிறகினை விரிக்கத் தானோ
சொந்தமாய்க் காதல் கொண்டேன்!!!

செம்மலர் இதழ்கள் தன்னில்
செம்மையாய் முத்தமொன்றை
எம்மலர் இதழ்கள் சூட
ஏங்கியா வந்து நின்றேன்
உம்மலர் இதழ்கள் தன்னில்
உதிர்ந்திடும் கவிதை கேட்டே
எம்மனம் ஏங்கி ஏங்கி
உன்னிடம் வந்ததம்மா


கட்டியே அனைத்து உன்னை
கனியிதழ் சுவைத்து மெல்லக்
கட்டிலில் ஒட்டி வாழும்
கனவை நான் காணவில்லை
எட்டியே நின்று உந்தன்
இதழ் சிந்தும் கவிதை தன்னில்
ஒட்டியே ஒழுகும் வெல்லப்
பாகினை குடிக்க வந்தேன்



சந்தமாய் சொல்லும் உந்தன்
செந்தமிழ்க் கவிதை தன்னை
நெஞ்சிலே சூடும் போது
சிந்தனை பொங்கி வருமே
கந்தலாய்ப் போன நெஞ்சம்
கவிதையை கேட்ட பின்பு
சொந்தமாய் உன்னை எண்ணி
சொர்க்கத்தில் மிதந்ததம்மா !

காலையில் எழுந்து உந்தன்
கருவிழி காண வேண்டி
வேலையை மறந்து நெஞ்சம்
வேகமாய் வந்த போது
சேலையாய் உந்தன்மீது
சேர்ந்தநல் துணைவரோடு
தாழையே உன்னைக்கண்டு
தனிமரம் ஆகிப்போனேன்!!!


அனிச்சப்பூ போல நீயும்
கனவினில் வந்து வந்து
கனியிதழ் வாயினின்று
கவிதையைச் சொல்லுவாயே
பனிபடர் மலரே அந்தப்
பாக்களின் நினைவில்தானே
தனிமரம் போல நானும்
தரணியில் வாடுகின்றேன்!

வாடிய நெஞ்சம் இன்று
வளர்தமிழ் கலந்ததாலே
ஆடியமனத்தில் நாளும்
அழுந்திய உயிராய் நிற்கும்
தேடியே சரண் புகுந்து
திகழொளி யா கி வந்த
நாடிய தமிழையென்றும்
நலமுடன் போற்றி வாழ்வேன் !

வானம் தொட்ட வாழை !


நெஞ்சமொரு கவி எழுத
நினைத்ததையா நேற்று - அதற்குப்
பஞ்சமில்லை கவிஎழுதப்
பார்த்த கதை நூறு ! !

சாலை யோரப் பாதையிலே
நின்றிருந்தேன் நேற்று -ஒரு
வாழை உடலைப் பார்த்ததுதான்
கவிதை வந்த கூற்று !!

வாட்டசாட்டமாக வந்து
அருகினில் நின்றாள் -தன்
நோட்டம் போடும் கண்களிலே
பேசியும் நின்றாள் !!

ஆறடிக்கும் மேல் மாதைப்
பார்த்ததுண்டா நீங்கள் -நான்
அதற்கு மேலும் ஓரடியைப்
பார்த்துவிட்டேன் போங்கள் !!

வாழை மரம் போல அவள்
வானத்தைத் தொட்டாள் -இந்த
ஏழை இவன் ஐந்தடியாய்
அருகினில் நின்றாள் !!

எட்டு முழச்சேலை அவளுக்
கெந்த மூலைக்கு அது போல்
எட்டு மடங்கு வேணுமன்றோ
அந்த வாழைக்கு?!

விலைவாசி !

ஒ ரோகினியே
நீ
இந்தியாவின் மீது
பறக்கும் போதுமட்டும்
சற்றே உய ரத்தில் பற
இல்லையேல்
வேகமாய் உயர்ந்து வரும்
விலை வாசிச் சுவரில்
மோதிக்கொள்வாய் !