Sunday, July 27, 2014

                                               நலம்வாழ நல்வழி
                                                   ------**** -------
காலைக்கதிர்வரும் வேளை எழுந்ததும்
கடமையைத் துவங்கிவிடு- தாய்
கடவுளைத் துதித்து விடு!

          ஓமெனும் பிரனவ மந்திரமதனை
          ஓங்கியே ஒலித்து விடு- மூச்சினை
           வாங்கியே இழுத்து விடு!

ஊளைச்சதையினை உடம்பிலிருந்தே
ஓடவிரட்டி விடு- அதற்கு
உடல்பயிற்சிகள் செய்துவிடு!

          நீரின்றி உடம்பு நிலையாதென்பது
          சித்தர்கள் வகுத்த வழி- நிறைய
          நீரினைக் குடித்துக்கழி!

சுத்தம்சுகமாய்ச் சோறுபோடும்
மூத்தோர்சொன்னமொழி-நீரில்
நித்தமும் நீயும்குளி!

          வாதபித்த கபமதை உடம்பில்
          பதமாய் ஓட விடு-அதற்கு
          அறுசுவை உணவை எடு!

அறுசுவை உணவை அனுதினம் உண்டால்
நாடிகள் சம்மாகும்-அதுவே
கோடிக்குச் சம மாகும்!

          பச்சைக்காய்கறி பயிருடன்கீரையைப்
          பாங்குடன் உண்டுவிடு-பல
          நோய்களை ஓட்டிவிடு!

வாரம் ஒருமுறை எண்ணைக் குளியல்
முறையாய் எடுத்துவிடு-வாழ்வை
நிறைவாய் வாழ்ந்து விடு!

          புகையிலைமதுவெனும் போகப்பொருள்களை
          மனதிலும் நினைக்காதே-உடல்
           நலம் அதை இழக்காதே !

தெய்வப்புலவன் வள்ளுவன் குறளினை
தொய்வின்றிப் படித்து விடு-அதன்
சொல் படி வாழ்ந்து விடு!!!

Saturday, March 1, 2014

                                     ஏன் இந்த மாற்றம்!!!!
                                              ----------------

மும்மாரி  பொழிந்ததெங்கள்  வானம்!  -இன்று
திசைமாறிப்  போனதேனோ  மேகம்?
கல்மாரி  விழுந்த தெல்லாம்  போச்சு!  -குளிர்
காற்றுகூட  வெப்பக்கதிர்  ஆச்சு!

         முப்போகம்  விளைந்த தெங்கள்  பூமி!  -இன்று
          முட்புதராய்ப்  போனதேனோ  சாமி?
          முக்கனிகள்  தந்தநல்ல  மரங்கள் -விறகாய்
          எரிந்ததாலோ  இன்று இந்த  வினைகள்?

விளைநிலத்தை  வீடாக்கி  வைத்து - அதில்
வீசுதென்றல்  தனைச்சேர்த்துப்  புதைத்து!
காய்கறிகள்  பயிர்செய்ய வளர்த்து -அதில்
கடும்நஞ்சை  உரமாகத்  தெளித்து!

          நிறம்மாற்றி  வைத்துவிட்டோம்  நீரை -அமைதி
          நிலைமாற்றிக்  கதறவிட்டோம்  ஊரை!
         கரைமாற்றிக்  கட்டிவிட்டோம்  நதியை!  -குப்பைக்
          குளமாக்கி  வைத்துவிட்டோம்  கடலை!

கறும்புகையால்  காற்றில்  மாசைக்  கூட்டி -உச்சி
வான்துளைக்க  வீசிவைத்தோம்  ஈட்டி!
மனிதமெனும்  மாட்ச்சிமையை  மறந்து  -சுய
நலமதுவே  வாழ்க்கையென  நினைந்து!

          அச்சமடம்  மானமதை  மறந்து  - தமிழன்
          உச்சமெனும்  பெரும்புகழை  துறந்து!
          குணம்மாறிப்  போனதம்மா  வாழ்க்கை -அதனால்
          திசைமாறிப்  போனதம்மா இயற்கை!!!

Sunday, February 9, 2014

தமிழர்கள்!!! !!

                                   தமிழர்கள்!!!                                                                             இ ந்தியத்தாயின் பிள்ளைகளில்
நாங்கள்
நிறம் கறுத்தவர்கள்-ஆனால்
மனம் வெளுத்தவர்கள்!

அன்பிற்கும் பண்பிற்கும்
அடிபணிபவர்கள்-ஆனால்
அடிமைத்தனத்தை
அடித்து ஓட்டுபவர்கள்!

கட்டளைகளால் எங்கள்
கைகளை யாரும்
கட்டிப்போடமுடியாது-ஆனால்
கருனைவிழியின்
பார்வைக்குமட்டும்
நாங்கள் கனிந்துபோவோம்!

வள்ளுவனால்
வாழ்க்கை  இலக்கணத்தை
வகுத்து  வைத்தவர்கள்!
வந்தாரை வாழவைத்தே
பாழாய்போனவர்கள்!

சாதியெனும் சாக்கடையில்
விழுந்து
நித்தம் நித்தம்
செத்துப் பிழைப்பவர்கள்!!

ஒற்றுமை என்னும்
உயிர்ச்சொல்லைமறந்ததனால்
போகுமிடமெல்லாம்
பொசுக்கப்படுபவர்கள்!!

இணை ஏது?

                                      இணை ஏது?
                                          -----------
இல்லைதமிழ்   மொழிக்கு இணை
              இங்கு என இரைந்தோமே!
முல்லைமலர்   போலதமிழ்
               மணக்குமென  மொழிந்தோமே!
   
நல்லதமிழ்   மொழிபேசி
               நடைமுறையில்  வாழ்ந்தோமா?
தெள்ளுதமிழ்   பாட்டெழுதத்
               தெரிந்துநாம்   வைத்தோமா?

நல்லதமிழ்   மொழியின்புகழ்
                  நாம்அறிந்து   வைத்தோமா?
இல்லையெனத்   தான் உரைப்பார்
                  இதனைநாம்   மறுப்போமா?

நெல்லைத்தமிழர்  பேசும்தமிழ்
                  நல்லதமிழ்   மொழிதானா?
கள்ளைப்போல்   மயக்கம்தரும்
                 கனிந்ததமிழ்   அதுதானா?

சென்னைத்தமிழர்   பேசும்மொழி
                 செந்தமிழ்   மொழிதானா?
தென்னைமரத்   தென்றலெனத்
                 திகழும்தமிழ்   அதுதானா?

கோவைத்தமிழர்   பேசும்மொழி
                 கொஞ்சுதமிழ்   மொழிதானா?
கோவைப்பழம்   போல் இனிக்கும்
                  கன்னித்தமிழ்   அதுதானா?

செம்மொழியில்   பெயர்சூட்டி
                  அழைப்பதுநாம் எப்போது?
தனித்தமிழில்   நாம்பேசி
                  சிறப்பதுநாம் எப்போது?

Thursday, January 9, 2014

மரணம் !

எங்கிருந்தோம் என யாரறிந்தோம் ?-இனி
எங்குறைவோம் என யாரறிவோம் ?

வந்திருந்தார் வந்து வாழ்ந்திருந்தார் -இங்கு
வந்த வினை சுபம் சென்று விட்டார் !

கள்ளமில்லா மனம் வெள்ளையம்மா - அது
எல்லையில்லா வெளி சென்றதம்மா !

ஊனை மட்டும் உயிர் விட்டதம்மா !-அந்த
உண்மை மட்டும் பொது சட்டமம்மா !

ஆத்மசுகம் பெறச் சென்றதம்மா -அது
அண்டந்தனில் நிலை கொண்டதம்மா !


பெற்றவரும் துயர் உற்றவரும் - அழ
முற்றுமென உயிர் விட்டதம்மா !

சொந்தமில்லை பெரும் பந்தமில்லை -அதை
தங்க வைக்க இங்கு சட்டமில்லை !

கொண்டுவந்த பொருள் ஏதுமில்லை -உடன்
கொண்டுசெல்ல வழி அங்குயில்லை!

சோ க ங்கொள்ள மனம் தேவையில்லை -அவர்
சொந்தமடி செல்ல தடையுமில்லை !

போனதெண்ணி மனம் நோவதென்ன ?-தினம்
எண்ணிஎண்ணி அழுது ஆவதென்ன ?

ஆறவிடு மனம் ஆறிவிடும் - நாள்
ஓடிவிட அது தேறி விடும் !.

வாழ்த்திடுவார் சென்று வாழவைப்பார்-என்று
வணங்கிடுவோம் என்றும் வணங்கிடுவோம்!!!