Wednesday, March 11, 2020

தாலாட்டு !!!

ஆரிரரோ ஆரிரரோ
ஆராரோ ஆரிரரோ
பெத்தபுள்ளே நான் உனக்கு,
சொத்து சுகம் சேத்துவைப்பேன்--அத
கட்டிக்காத்து வாழ்ந்திடவே,
பட்டறிவும் சொல்லிவெப்பேன்!
பட்டறிவு நான் பெறவே
பட்ட அடி போதுமையா! கத்ததெல்லாஞ் சொல்லித்தாறேன்,
பக்குவமா கேட்டுக்கையா !
ஆரிரரோ ஆரிரரோ
ஆராரோ ஆரிரரோ
சொத்து பத்து அத்தனையையும்
சேத்து நீயும் வச்சிருந்தா,
சொந்தபந்தம் தேடிவந்து,
சேர்ந்து புகழ் பாடுமையா!
வித்து அதை நீ இழந்து,
சோகத்திலே தேய்ந்திருந்தா,
பெத்துப்பொறப்பு கூட உன்னை
பித்தனைப்போல் பாக்குமைய்யா !
ஆடிக்காத்தில் அம்மிக்கல்லும்
ஆட்டங்கண்டு போவதுபோல்,
பந்தபாச சொந்தமெல்லாம்
பேசி உன்னைக் கொல்லுமையா
ஆரிரரோ ஆரிரரோ
ஆராரோ ஆரிரரோ
குத்தங்குறை சொல்லி நித்தம்,
குத்துயிரா ஆக்குமையா
முத்திப்போனகத்திரியாய்
மூலையிலே வீசுமையா !
விட்டகுறை தொட்டகுறை,
என்று கதை கட்டுமையா
பட்டஅடி போதுமென்று,
பரிதவிக்க ஓட்டுமையா!
துன்பமுண்டு துயரமுண்டு
பூமியிலே நாம் பொறந்தா
என்பதனை நீ உணர்ந்து
ஏற்றமுடன் வாழோணும்..
ஆரிரரோ ஆரிரரோ
ஆராரோ ஆரிரரோ !
சூதுவாது இல்லாத
சுத்தமாக வாழோணும்
காலையிலே நீ எழுந்து
உன் தொழிலைப் பாக்கோணும்!
ஊருச்சொத்து வேண்டாமுன்னு
உறுதி மனம் கொள்ளோணும்
ஊருக்கு நீ உதவிசெஞ்சு
உத்தமனாய் வாழோணும்!
ஊருலகம் நூறு சொல்லும்
உதறிவிட்டு நானுனக்கு
சொல்லித்தந்த பாடங்கேட்டு
பக்குவமா வாழோணும் !
ஆரிரரோ ஆரிரரோ
ஆராரோ ஆரிரரோ .

No comments:

Post a Comment