Sunday, July 12, 2015

சந்தனப்படகில் குங்குமநிலவு!!!

 சந்தனப்படகில் குங்குமநிலவு!!!

>>>>௦<<<<
நெற்றியது கடலாக விரிந்தாடுது-அதில்
கற்றைமுடி மேகமென உருண்டோடுது!
பற்றியெந்தன் மனமதனைக் கவிபாடுது-காதல்
முற்றியதால் நெஞ்சமது குதிபோடுது!!

கடலலையாய் இருபுருவம் மிதந்தாடுது -காதல்
விடுகதையாய்க் கண்ணிரண்டும் கதைபேசுது!
மடல்வாழைக் கழுத்தழகேபொன்நகையானது-அவள்
துடிப்பான செவ்விதழே புன்னகை யானது!

கன்னங்களோ மாங்கனியின் நிறமானது -கலை
வண்ணங்களோ அவளிடத்தில் கையேந்துது!
மின்னலெனக் காதணிகள் ஒளிவீசுது-காதல்
சின்னமெனும் வெண்ணிலவோ தலைசாயுது!

மையெழுதும் இருவிழிகள் மீனானது-காதல்
கவியெழுத இமைகளது தூதானது!
பொய்யெழுதும் கவிதை மனம் மெய்யானது-அழகு
தெய்வமெனக் கவியனுளம் கைகூப்புது!!

இருபுருவ மத்தியிலோ சந்தனப்படகு-அதில்
ஊர்கோலம் போகுதம்மா குங்குமநிலவு!
கருங்கூந்தல் ஊஞ்சலிலே மல்லிகை மலரு-உடன்
சேர்ந்தாடி மயங்குதம்மா கவிஞனின்மனது!!    

No comments:

Post a Comment