Thursday, July 30, 2015

கண்ணீர் அஞ்சலி!!!

கண்ணீர் அஞ்சலி!!!
                    -----000-----
அருந்தமிழ் ஞானியே!
அனு விஞ்ஞானியே!
ஆண்டவனுக்கு
ஆலோசனை சொல்ல
ஆள் இல்லாத தாலோ
உன்னை
அழைத்துக்கொண்டான்!

கல்மனம் கொண்ட காலனே
இந்தியாவே
அழுதுகொண்டு இருப்பது
உன் இறுகிய மனதிற்குத்
தெரியவா போகிறது?

அன்பின் சிகரமே
அப்துல் கலாமே!
உன்
பிரிவின் பிடியில்
சிக்கித் தவிக்கும் எங்களுக்கு
ஆண்டவனால் கூட
ஆறுதல் சொல்ல முடியாது!!

நீங்கள் காட்டிய
அன்பிற்கும் பாசத்திற்கும்
நாங்கள்என்ன கைமாறு
செய்யப் போகிறோம்?
ஆகவேஉங்கள்
சாதனைகளைப்போற்றி
போதனைகளை ஏற்று
வல்லரசாய் நம் நாட்டை
வளர்க்க உறுதி ஏற்று
எங்களுக்காக உழைத்த
உங்கள் ஆன்மா
சாந்தி அடைய
எங்கள்
கண்ணீர் மலர்களைக்
காணிக்கை ஆக்குகிறோம்!!

Sunday, July 12, 2015

சந்தனப்படகில் குங்குமநிலவு!!!

 சந்தனப்படகில் குங்குமநிலவு!!!

>>>>௦<<<<
நெற்றியது கடலாக விரிந்தாடுது-அதில்
கற்றைமுடி மேகமென உருண்டோடுது!
பற்றியெந்தன் மனமதனைக் கவிபாடுது-காதல்
முற்றியதால் நெஞ்சமது குதிபோடுது!!

கடலலையாய் இருபுருவம் மிதந்தாடுது -காதல்
விடுகதையாய்க் கண்ணிரண்டும் கதைபேசுது!
மடல்வாழைக் கழுத்தழகேபொன்நகையானது-அவள்
துடிப்பான செவ்விதழே புன்னகை யானது!

கன்னங்களோ மாங்கனியின் நிறமானது -கலை
வண்ணங்களோ அவளிடத்தில் கையேந்துது!
மின்னலெனக் காதணிகள் ஒளிவீசுது-காதல்
சின்னமெனும் வெண்ணிலவோ தலைசாயுது!

மையெழுதும் இருவிழிகள் மீனானது-காதல்
கவியெழுத இமைகளது தூதானது!
பொய்யெழுதும் கவிதை மனம் மெய்யானது-அழகு
தெய்வமெனக் கவியனுளம் கைகூப்புது!!

இருபுருவ மத்தியிலோ சந்தனப்படகு-அதில்
ஊர்கோலம் போகுதம்மா குங்குமநிலவு!
கருங்கூந்தல் ஊஞ்சலிலே மல்லிகை மலரு-உடன்
சேர்ந்தாடி மயங்குதம்மா கவிஞனின்மனது!!    

Saturday, July 4, 2015

உயிர்க்குருவி!!!

 உயிர்க்குருவி!!!
முழுதாய்ச்சிவந்தன இருவிழிகள்
முத்தாய் விழுந்தன நீர்த்துளிகள்!
பித்தாய்ப்புகழைத் தினம் நினைந்து
சிட்டாய்வாழ்வது என் உயிரு !

செத்தால் விழுவது உடல்கூடு
துணையாய்வருவது புகழ் ஏடு!
கண்ணில் ஆயிரம் கலக்கம் உண்டு
கவிதையில்அதனைத் தினம்பாடு!

புகழுக்குயிரைக் கொடுக்கும் உள்ளம்
புழுதியில் வாழ்ந்து மாயாது!
பொருளுக்கு ஏங்கும்பேய்நினைவை
என்றும் என்மனம் நினையாது!

செத்தாலிந்தப் பிள்ளைதனைப்
பெற்றோர் கூட மறந்திடுவார்!
உற்றாருறவினர் கூட இந்த
உலகிற்காக அழுதுவைப்பார்!

செத்தால்போகும் திசை ஏது?
தெரிந்தவர் உலகில்  யாருமில்லை
ஆயினும் இருக்கும் காலம்வரை
அழியாப்புகழுடன் தானிருப்பேன்!

அஞ்சேன்பிறர்சொல்கேட்டென்றும்
துஞ்சேன் பழிமேல் வருமாயின்!
எஞ்சிய புகழைச் சுமந்து கொண்டு
எறிவேன்  இந்த உடல் கூட்டை!

பிறர்பொருள்தருவார் என்றெண்ணி
பரிந்துரைசொல்ல நான்போகேன்!
பிறர்பொருள்தன்மேலாசைகொண்டு
பேயாய்அலைந்து நான்சாகேன்!

பிறந்தான்வாழ்ந்தான்பெரும்புகழைச்
சுமந்தான்போனானெனப்போவேன்!
அடிகளை எண்ணி வைப்பவன்நான்
கன்னித்தமிழப் பரம்பரை நான்!

களங்கம் இல்லாப் பார்வை யுடன்
காவியம்  பாடும் கவிஞன் நான்!
ஆயிரம் பேர்வந்து சொன்னாலும்
அடியவன் நேர்மை மாறாது!

உடலுல்லவரையில் கண்ணியத்தை
உயிராய்மதித்து வாழ்பவன்நான்!
காசுப்பேய்கள் வாழுமிந்த
கழிசடை உலகில் பிறந்துவிட்டேன்!

எண்ணம் எப்படி அப்படித்தான்
அவன்சொல்லும் செயலும்வாய்மொழியும்!
யோக்கியன் ஆயிரம் நன்மை செய்தும்
அயோக்கியன் ஆகத்தான்தெறிவான்!

அழும்பு வாழ்வுவாழ்பவனோ
அகில உலகப்புகழ் பெறுவான்!
நேர்மைக்கு இங்கு இடமில்லை
நல்மனதிற்கு வாழ்வுமிங்கில்லை!

தேகம் மாய்ந்து வீழ்வதற்கு
சந்தேகம் தானேகொடும்நஞ்சு!
குடியைக்கெடுத்துவீழ்த்திவிட்டு
நொடியில்மறைவதும்அதுதானே!

ஊருக்காக நானில்லை என்
பேருக்காகத்தானிருப்பேன்!
ஆயிரம் கவிதை எழுதி விட்டு
அழும்பில் வாழ்பவன்நான் இல்லை!

உடலைவிட்டு உயிர்க்குவி
உயரப்பறந்துபோய்விட்டால்
ஊரார்வாய்கள் அத்தனை யும்
உண்மை க்கவிஞனின்புகழ்பாடும்!

மயிரை நீத்தால் மான்கவரி
உயிரை மாய்த்து வீழவதுபோல்
மானம் நீத்தால் இவ்வுலகின்
மண்ணில் வீழ்ந்துமாண்டிடுவேன்!

என்னைநம்பி வருவோர்க்கு
என்றும் நான் தான் புகழ் ஏணி!
என்னை வதைத்து வாழ்ந்தாலும்
எனக்கென்ன நான் ஒருஞானி!!

வளர்தமகளைப்போல் எல்லா
வாலிபப் பெணகளை நினைக்கின்ற
உள்ளம் உலகில் எங்குமில்லை
உண்மை இதிலே பொய்யுமில்லை!

கற்றேனில்லை பெருங்கல்வி
ஆயினும்  கவிஞன் சொல்லுறுதி !
விற்றவனில்லை பொய்ம்மை களைப்
பெற்றேன் பெருமை பொய்யில்லை!

மதுவிடம் மயக்கம் கொண்ட  வனும்
மாதிடம் விளக்கம் கண்டவனும்
புகழிடம் பெற்று வாழுகிற
பொய்ம்மை உலகினை வெறுக்கின்றேன்!

அழிவிடம் கொண்டு சேர்க்கின்ற
கழிவிடம்தனில் போய்நான்சேரேன்!
புகழிடம் கொண்டு சேர்க்கின்ற
பொதுவழிதனில்தான் நான் போவேன்!

சூடும்சொரணையும் நெஞ்சிலுண்டு
பாடும் கவியும் நாவில் உண்டு!
மேடும் குழியும் நானறிவேன்
வாழும்வழியும் நானறிவேன்!

நல்லானொருவன் நெஞ்சமதை
நாயினும் கீழாய் எண்ணி நிதம்
வில்லாலடித்துத் தின்றாலும்
சொல்லாலடித்துப் புதைத்தாலும்

புதைத்த இந்த பூமிதன்னில்
விதைத்த அவனின் மேனியிலே
முளைத்த புல்லும் மேலோங்கி
உரத்த குரலில் புகழ்பாடும்!!

வாய்மை ஒன்றே வர்த்தகனின்
விளைந்த கொள் முதல் ஆகிவிட்ட
பொய்ம்மை உலகின்புறக்கடையில்
உண்மை சிறைபட்டு கிடக்கின்றதே!

தூய்மை எண்ணம் தவறாகி
துன்பக்கடலில் மிதக்காது
எண்ணம் முழுதும்  மெய்யாகி
எடுப்பார்கைப்பிள்ளை ஆகாது !

பற்று இல்லா மனிதனவன்
பாதம்  நடந்த பூமிதனில்
புல்லும் பூண்டும் முளைக்காது
புழுவும் பூச்சியும் செல்லாது!

புத்தன் வாழ்வில்புகழ் விளைந்தால்
எத்தன் வாழ்வில் எது விளையும்?
பித்தம் தலைக்குள் ஏறிவிட்டால்
சித்தம் வினைக்குள் மூழ்கி விடும்!

ஆற்றுநீரில் பினம் கிடந்தால்
ஊற்றைத்தோண்டி நீர்குடிப்பான்!
சேற்றுக்குழியில்  செம்பிருந்தால்
எடுத்துக்கழுவி மனைசேர்ப்பான்!

போகும்வழியில் புதர் இருந்தால்
மாற்று வழியில் ஊர் கடப்பான்!
சாவின் பிடிதனில்மீண்டுவிட
தரணி யில் ஏதும் வழி உண்டோ?

பிறந்த வன் செழித்து வாழ்வதுவும்
வாழ்ந்தவன் முதிர்ந்து சாவதுவும்
உண்மை  நியதி என்றாலும்
உண்மை வாழ்வு  பொய்யாமோ?

ஆகையினாலே புவி மீதில்
அன்பால் சிறந்து வாழ்வோனும்
அறத்தால் உயர்ந்து நிற்போனும்
பாவங்கள் செய்யாதிருப்போனும்

எல்லா உயிரும் தம்முயிர்போல்
எண்ணிக் குணநலம் வாழ் வோனும்
மண்ணில் புதைந்து மறைந்தாலும்
மாம்புகழ் மட்டும் மறையாது!!!