Sunday, May 31, 2015

தூது போ குயிலே!!

தங்கத்தாமரைத்தளிர் முகமதனை
கவியிவன் கண்கள் தேடுது!
தங்கத்தமிழ்மலர் பேசமறந்திட
என்விழிகளும் இங்கேவாடுது!

வின்னில் பகலொளி விளக்கைப்போலே
மின்னிடும் வான்வெளி மீன்களே!
என்னிடம் கொஞ்சம் பேசச்சொல்லி
பெண்ணிடம் தூது போங்களே!

தூங்காதிருவிழி தாங்காமனது
தனிமையில் இங்கு தவிக்கிது!
மங்களமலரின் மஞ்சத்தில் மனது
மயங்கிட தினமும் துடிக்கிது!

வானில்வட்டம் போடும் அழகு
வண்ணப்பறவைக் கூட்டங்களே!
கன்னம்குழியச் சிரிக்கும்அந்த
மான்விழிமங்கையைக் காட்டுங்களே!

கண்களிரண்டும் கருநிறவண்டாய்
மின்னுமஅவள்முகம் கண்டாயா?
கருநிறக்குயிலே கவியிவன் தனிமையில்
வாடுதல் நீபோய்ச் சொன்னாயா?

கண்ணழகி!!!


கருவண்டு போலிரண்டு
விழிகண்டு நெஞ்சம்
தேனுண்ட பொன்வண்டு
போல்வானில் துஞ்சும்!!

இருபுருவம் வில்லென்று
மனம்கண்டு  கொண்டு
அன்பென்ற சொல்லொன்றை
தாவென்று கெஞ்சும்!!

இமையிரண்டு சிட்டென்று
விழியிரண்டில் பறக்க
அதுகண்டு என்மனதில்
காதல்மது சுரக்க!!1

பூவென்று பொன்வண்டு
விழியிரண்டை நெருங்க
போவென்று பொன்வண்டை
இமையிரண்டும்துரத்த!!

இருகூந்தல் சடையதனில்
பெருங்காந்தல் சூட
கருமேகம் என்றெண்ணி
சிறுமயில்கள் ஆட!!!

கண்ணழகி கார்கூந்தல்
பெண்ணழகி இவளோ?
மின்னுகிற இ ணையழகு
மண்ணுலகில் உளதோ?

என்னென்று நான்சொல்ல
மானொத்த அழகு!
விண்ணேறிப் பறக்கிறது
என்கவிதை மனது!!