Thursday, June 18, 2015

இதுவா சுதந்திரம்?

ஆயிரங்கோடி இன்பங்கள் தேடி
அனுதினம் மனிதன் தவம் இருந்தான்!
மேவியகோடி துன்பங்கள் சூடி
தினம் தினம் மேனிச்சுகமிழந்தான்!

காரியவாதி ஆகிய மனிதன்
செய்திடும் செயலில் நிலைகுலைப்பான்!
காந்தியவாதி ஆகியமனிதன்
காசின்றிச் செத்தே உயிரிழப்பான்!

தேசியவாதம் பேசிய மனங்கள்
போனது எங்கே நாம்அறியோம்!
தேசியகீதம் பாடிய நாமோ
பாடிய உடனே பொருள் மறந்தோம்!

அரசியல்வாதி எழுதிய கணக்கில்
ஓட்டெனத்தானே நாம் இருப்போம்!
இல்லம் தேடி இலவசம் வந்தால்
ஓட்டெனத்திருப்பி நாம்கொடுப்போம்!

லஞ்சம் வாங்கிச் சேர்த்தான் பொருளெனச்
சொல்லும் யோக்கிதை நமக்கில்லை!
நாட்டைப்பற்றிய கவலை நெஞ்சில்
கொஞ்சம் கூட நமக்கில்லை!

சாதியவாதம் பேசிடும் மனிதன்
நச்சென நம்மை தரம்பிரிப்பான்!
மோதியசாதிக் கலவரங்கண்டு
பாரதமாதா தலை குனிவாள்!!

பெண்ணேகாவல் தெய்வம் நமக்கெனக்
கோவிலில் அழகிய சிலைவைப்போம்
கருவிலிருப்பது பெண்னெனக்கண்டால்
களைத்திட நாமே பணம் கொடுப்போம்!

காசின்றிச்சோறு கோவிலில் உண்டு
கடும்தவம் செய்யத்தேவையில்லை
யாசகம் தனிலேகாசுகள் சேரும்
மதுவதன் போதைக்கு அலைச்சலில்லை!!

உழைப்பின்றிக் காசும் வீடின்றிச்சோறும்
கிடைத்திடக் கழனியில் யார் உழைப்போம்!
ஊருக்கோர் மடம் உறங்கிட வருதாம்
விளைத்திட இனிமேல் யார் போவோம்?  

Wednesday, June 10, 2015

 காதல் சீதனம் !!!
வில்லாக வளைகின்ற பொல்லாத புருவத்தில்
சொல்லாத கதை சொல்லும் பெண்மை!-அது
நில்லாமல் வடிக்கின்ற கள்ளான காதலினால்
கொல்லாமல் கொல்லுதடா எம்மை!

அதிகாலை வேளையிலே சுதிசேர்க்கும் ராகத்தால்
மதிமயக்கும் பாடலவள் எனக்கு!-அந்த
மதியழகுப் பூமகளை மனதார நேசித்த
கதையழகாய்ச் சொல்லவா உனக்கு?

அழகான முகத்தோடு கொடியான  இடையோடு
அவள்நடக்கும் நடையழகே அழகு!-அந்த
முழுதானநிலவுக்கு  பலியான சாதியினால்
வழிமாறிப் போனதட உலகு!

சின்ன இடை அழகும் சிஙகார நடை அழகும்
பின்னாமல் என்னெஞ்சைப் பின்னும்!-அந்த
பின்னலிலேவருகின்ற கண்ணான காதலினை
எண்ணியெண்ணி எந்தன்மனம்துள்ளும்!

மங்காத ஒளியோடு சிங்கார மையெழுதிச்
சிரிக்கின்ற கண்களடா அவைகள்!-தினம்
தூங்காத விழியோடு துடிக்கின்ற என்மனதின்
துயரங்கள் போக்கும் அந்த இமைகள்!

செவ்வாழை நிறமாக செம்பருத்திப் பூவாக
சிவந்திருக்கும் அவளழகு இதழ்கள்!-உலகு
ஒவ்வாத பேரழகை  ஒருகோடிதான்பெற்று
மலர்ந்திருக்கும் பொன் அழகுமலர்கள்!

மின்னுகிற அவள் அழகுகன்னத்தைக் கண்டாலே
எண்ணங்கள் எங்கெங்கோ பறக்கும் !-அதன்
வண்ணங்கள் தருமழகை கணகளால்பருகிவிட
நெஞ்சமதில்காதல் மதுசுரக்கும்!

செத்தாலும் மறக்காத முத்தான காதலினை
மத்தாப்பு பூவாக்கி வைப்பாள்!-அன்பு
வித்தாலே என்னாளும் மலர்கி்ன்ற சொத்தான
முத்தத்தில் எனையென்றும் நனைப்பாள்!

தாங்காத வேதனையில் தவித்தாலுமென்னெஞ்சை
மங்காத நிலவாக்கி வைப்பாள்!-துன்பம்
தாங்காத என்மனதை தளிர்கின்ற அழகான
தங்கமென என்னாளும் வைப்பாள்!

படகாகி நான்காதல் கடல் தாண்டிப் போகையிலே
துடுப்பாக அவள்வந்து நிற்பாள்!-நான்
நான் முடமாகிப்போனாலும் திடமாக என்வாழ்வை
திசைமாற்றி  என்னாளும்  வைப்பாள்!

நானின்றி அவளில்லை அவளின்றி நானில்லை
என்றெண்ணி வாழ்ந்திருந்தபோது-ஒரு
நாளோடுமுடிகின்ற கனவானகாதலுக்கு
வந்ததடா பிரிவு என்னும் தூது!

உறவென்ற சொல்லுக்குப் பொருளொன்று தருவதற்குப்
பிரிவொன்று வந்ததம்மா  எனக்கு!-அந்தப்
பிரிவதனைச் செந்தமிழில் கவியாக உரைப்பதற்கு
போதாது இந்த மனம் எனக்கு!

பன்னீராய் வடிகின்ற தண்ணீரைத் தருகின்ற
சுனையாகித்தான் வாழ்ந்தோம் அன் று!-அந்த
சுனை ஆடிவிளையாட மதயானை வந்ததனால்
வினையாகித்தான்போனோம் இன்று!

நெஞ்சோடு விளையாடும் பொன்னான காதலினால்
பன்னீரில் குளித்திருந்தோம் அன்று!-சாதி
நஞ்சோடும் சாக்கடையில் மிதக்கின்ற மனிதர்களால்
கண்ணீரில் குளிக்கின்றோம் இன்று!

அவனோடு நீபோனால் உன்னோடு உயிர்போகும்
என்றவளைச் சொல்கின்ற சொல்லும்-மகளை
உயிரோடு தீயிட ஊரோடு ஊர் சேரும்
அவலங்கள் நான் எங்கே சொல்ல?

கொல்லுகிற சாதிகளைக் கொண்டுவந்து வைத்தவர்க்கு
நெஞ்சில்நீதி நியாயம் ஏதும் இ்ல்லையா?-காதல்
நெஞ்சங்களை அள்ளிவந்து கொள்ளியிடத் துடிப்பவர்க்கு
மனிதாபிமானம் கொஞ்சம் கூட இல்லையா?

ஓடுகிற ரத்தமது எல்லோர்க்கும் சிவப்புத்தான்
எங்கிருந்து வந்தது இந்த சாதி?மூச்சில்
ஓடுகிற தென்றலது எல்லோர்க்கும் ஒன்றேதான்
எதற்கையா தேவையில்லா நீதி?

மேல்சாதி என்றே நீ மென்மையாகத் தின்றலும்
மலமாகக் கழிவதென்ன சந்தனமா?-பல
நூல்கற்று முன்னேறிப் பட்டங்கள் பெற்றாலும்
கீழ்சாதி உனக்கென்றும் தெருப்பினமா?

தனிமனித சுதந்திரத்தின் தத்துவத்தை அறியாமல்
தரங்கெட்டுத் திரியாதே மட மனிதா!-வாழ்வில்
இனி மனதில் சமத்துவத்தை அறியாமல் நீ வாழ்ந்தால்
வந்துவிடும் தண்டனைகள் சீதனமாய்!!

சாதிமதபேதமின்றி சமமாகவாழுகின்ற
புது உலகை நாமிங்கு படைப்போமா?-மனம்
காதல்கொண்டு மணம்முடிக்கும் புதுமனமாந்தருக்கு
சீதனமாய் அவ்வுலகைக் கொடுப்போமா?