Wednesday, August 22, 2018

                                ஆண்விடுதலை!
                         ---------------------
கவி பாரதியே
அன்று
வேண்டும் சுதந்திரம்
பெண்களுக்கென்று
வேண்டி வேண்டி
பாடிவிட்டு
நீ
போய் சேர்ந்துவிட்டாய்!
இன்று
முழுச் சுதந்திரத்தையும்
கொடுத்துவிட்டு
சோதனைச்சிறையில்
வாடும் எங்களுக்கு
சுதந்திரம் வேண்டிப்பாட
நீ எப்போது வருவாய்?    

Wednesday, June 13, 2018

தாய்க்கு ஒரு தாலாட்டு !!!

                         தாய்க்கு ஒரு தாலாட்டு !!!
                                   ------௦௦௦--------
கட்டையிலே உனை வைத்து
கருந்தீயில் சுட்டபோது
வெந்த துந்தன்மேனியில்லைநானம்மா!-நீ
பட்ட துன்பம் அத்தனையும்
பெருந்தீயில் கரைந்துவிட
நிம்மதியாய் நீ சென்று தூங்கம்மா!

அன்புருக எனை அனைத்து
நெஞ்சுருகப்பால் கொடுத்துத்
தந்த தெந்தமேனி உயிர்நீயம்மா!- பாசப்
பண்பொழுக   எனைச்சுமந்து 
பாசமுடன் எனை வளர்த்து
பரிதவிக்க விட்டதுதான் ஏனம்மா?

எனக்காகச்  சமைத்தெடுத்து
வரும் நேரம் காத்திருந்து
விருந்தாக நீயெனக்குப்படைப்பாயே!-அந்த
விருந்துண்டு நான்தூங்க
இரவெல்லாம் பாத்திருந்து
எனக்காக உன் தூக்கம் தொலைப்பாயே!

ஏனம்மா   எனைமறந்து
உன்னுயிரைத்தான் துறந்து
போனதெங்கே நீயெனக்கு சொல்லம்மா!- தனி
ஆனதம்மா  என் மனது
அழுகுதம்மா உனை இழந்து
வாழ்வதெங்கெ நீயின்றி சொல்லம்மா?

உனக்கெனவே ஒரு நாளும்
வாழாத இவ்வுலகில்
உழைத்த திங்கு போதுமென்றுபோனாயோ!- உன்
குருதி யெல்லாம் எனக்களித்து
உறுதி கொண்ட உடல் கொடுத்து
இறுதியாக நீயெங்கு போனாயோ?

உனை நினைத்து வாழ்வேனா
அழுதழுது தேய்வேனா
ஊனுறக்கம் இல்லாமல் மாய்வேனா?- நீ
தருமன்பைத் தினம் நினைந்து
கருனைவிழி தனை இழந்து
தனிமையிலேநான்வாழ்ந்து உய்வேனா?

பெற்றெடுத்த பிள்ளையெனை
பரிதவிக்க விட்டு உன்னைப்
பெற்றவரின் மடிதூங்கப்போனாயோ?-இந்த
நிலையில்லா வாழ் வதிலே
நித்தமொரு நிலை மாறும்
என்பதனை எனக்குரைத்துப் போனாயோ?

போதும் அம்மா போதுமிந்த
பூமியிலே பட்டதெல்லாம்
பூலோகம் மறந்து நீயும் தூங்கம்மா!- நீ
பட்ட துன்பம் அத்தனையும்
இட்ட தீயில் கறைந்துவிட
நிம்மதியாய் நீ சென்று தூங்கம்மா!!