Sunday, August 23, 2015

கலாமின் கனவை நனவாக்க!!

கலாமின் கனவை நனவாக்க!!
                             .......0.........
அனுதினம் கனவு காண்கலாம்
அவைகளை நனவாய் ஆக்கலாம்!
வாருங்கள் அறிவுரை கேட்கலாம்
உழைத்திடும் கைகளை கோற்கலாம்!

வீட்டினில் மரங்களை வளர்க்கலாம்
நாட்டிற்கு அனைவரும் உழைக்கலாம்!
அக்கினிச் சிறகினை விரிக்கலாம்
வல்லரசாய்  நாம்  உதிக்கலாம்!

வாருங்கள் நாம் பசி தணிக்கலாம்
உலகில் நம்நிலை கனிக்கலாம்!
ஏனிந்த நிலையென நினைக்கலாம்
அதைமாற்றிடத் தினமும் உழைக்கலாம்!

சாதிகள் மதங்களை வெறுக்கலாம்
சமத்துவ விதைகளை விதைக்கலாம்!
அனைவரும் சம்மென மதிக்கலாம்
அதற்கென வழிமுறை விதிக்கலாம்!

பிரிவினை வாதத்தை ஒதுக்கலாம்
ஒற்றுமை உயர்வென போதிக்கலாம்!
நாட்டில் நதிகளை இணைக்கலாம்
விளையும் பொருள்களை பெருக்கலாம்!

இதைத்தான் சொன்னார் அப்துல்கலாம்
அவர்சொன்னதைச் செய்தால் சாதிக்கலாம்!
கனவினை நனவாய் ஆக்கலாம்
பெரும்புகழ் நமக்கே சேர்க்கலாம்!!

Sunday, August 2, 2015

கலாம் அவர்களுக்குக் கண்ணீர்(பூக்கள்)அஞ்சலி!!

 கலாம் அவர்களுக்குக் கண்ணீர்(பூக்கள்)அஞ்சலி!!
                                              -000000-
பேருலகம் முழுவதுமே பெருந்தவிப்பில் இங்கிருக்க
ஆகாயக் கப்பலிலே யார்வந்து உனைஅழைத்தார்?

ஓராயிரம் கோடி  இளம் மனங்கள் காத்திருக்க
தேரேரிப்போனாயோ தென்னகத்துப் பெருமகனே!

வல்லரசாய்நாம்வாழ வழிகள்பல சொல்லிவிட்டு
சொல்லவொன்னா துயர்தந்து போனதெங்கேபொன்மகனே!

நீசொன்ன படிதானே கனவெல்லாம் கண்டிருந்தோம்
கனவெல்லாம்நனவாகும்  முன்போன மாயமென்ன?

அன்னைமடி போயுறங்கும் ஆசையிலே போனாயோ?
மன்னவனே நீமுடிந்தால் மறுபடியும் வாராயோ!

சின்னவிழிப் பார்வையிலே நீ சிரிக்கும் சிரிப்பழகு
கண்ணிருந்து மறையாமல் கலங்கிடத்தான் வைக்கிறதே!

சம்பவமாய்ப் பிறப்பதனை நினைக்காமல் நீயதனைச்
சரித்திரமாய் மாற்று எனச் சளைக்காமல் சொல்லிவிட்டு

பெறாமல் பெற்றெடுத்த பிள்ளைகளைத் தவிக்கவிட்டு
சரித்திரமாய் நீமாறி பேக்கரும்பு போனதென்ன!

படிக்காமல் ஒருபிள்ளை பாரதத்தில் இல்லையெனும்
படியான உன்சொல்லை என்னாளும் போற்றிடவும்

சளைக்காமல் நீசொன்ன தத்துவத்தை என்னாளும்
மறக்காமல் நெஞ்சிருத்தி வல்லரசாய் மாற்றிடுவோம்!

கண்ணிருந்து வடிகின்ற கண்ணீரின் பூக்களையே
காணிக்கையாய்த் தானுங்கள் காலடியில்வைக்கின்றோம்!

அன்னைமடி போய் உறங்கும் ஆசையிலேபோனாயோ
மன்னவனே நீமுடிந்தால் மறுபடியும் வாராயோ!!