Tuesday, January 20, 2015

            தீபாவளி!

          வெடி இல்லாத் தீபாவளி--வேண்டும்
          புகை இல்லாத் தீபாவளி!
                                                                                                 
          காசெல்லாம் கரியாக வெடிக்கின்றதே!
          காற்றெல்லாம் மாசாகி கெடுகின்றதே!
          காதெல்லாம் செவிடாகி அடைக்கின்றதே!
          ஊரெல்லாம் பாழாகி கிடக்கின்றதே!

                      வெடி இல்லாத் தீபாவளி--வேண்டும்
                      புகை இல்லாத் தீபாவளி!

          பறவையெல்லாம் பயந்தோடிப் பறக்கின்றதே!
          விலங்கெல்லாம் பாய்ந்தோடிப் பிரிகின்றதே!
          நெஞ்செல்லாம் கரியேறி எரிகின்றதே!
          கண்ணெல்லாம் புகைமேவி அழுகின்றதே!

                      வெடி இல்லாத் தீபாவளி--வேண்டும்
                      புகை இல்லாத் தீபாவளி!

          பச்சிளம் குழந்தைகட்கும் பகையாகுதே!
          மூச்சிரைக்க முதியோரை புகைவாட்டுதே!
          தப்பாமல் விபத்துகள் பலிவாங்குதே!!
          பார்முழுதும் மாசாகிக் கெடுகின்றதே!

          வெடி இல்லாத்தீபாவளி-வேண்டும்
          பலி இல்லாத் தீபாவளி!!
                

பொங்கல் புத்தாண்டுத்திருநாள் வாழ்த்து!!!

 பொங்கல் திருநாள் வாழ்த்து!!!
                         ---------- xxxxx ----------

பொங்கல் புத்தாண்டுத்திருநாள் வாழ்த்து!!!

                         ---------- xxxxx ----------

தை (சுறவம்)பிறந்தால் வழி பிறக்கும் தங்கமே தங்கம்!- நம்

துன்பமெல்லாம் பறந்துபோகும் தங்கமே தங்கம்!

     உணவைவிட நீர் பெரிது தங்கமே தங்கம்!- அதை

     வீணாகச்செய்ய வேண்டாம் தங்கமே தங்கம்!

ஏரிகுளம் தூர்வாரத் தங்கமே தங்கம்!- நமது

நீர்பஞ்சம் தீர்ந்து போகும் தங்கமே தங்கம்!!

     ஊர்கூடித்தூர்வாரத் தங்கமே தங்கம்!- நம்

     ஒற்றுமையால் நீர்சேரும் தங்கமே தங்கம்!!

மழைநீரைச் சேர்க்க வேண்டும் தங்கமே தங்கம்!- அதை

வீடுதோறும் செய்யவேணும் தங்கமே தங்கம்!

     ஆற்றையெல்லாம் ஒருங்கிணைப்போம் தங்கமே தங்கம்!- அதுக்கு

     அனைவருமே கைகோர்ப்போம்தங்கமே தங்கம்!!

வீட்டுத்தோட்டம் போட்டிடுவோம் தங்கமே  தங்கம்!- நல்ல

காய்கறிகள் விளைவிப்போம் தங்கமே தங்கம்!

     இயற்கை உரம் பயன்படுத்தி தங்கமே தங்கம்!- நாம்

     நஞ்சில்லா உணவுண்போம் தங்கமே தங்கம்!

சாமை ராகி வரகு  திணை தங்கமே தங்கம்!- நாம்

சமையலிலே சேர்த்துண்போம் தங்கமே தங்கம்!

     தமிழர் திருநாளம்மா தங்கமே தங்கம்!- நம்

  சுறவப்பொங்கல் திருநாளாம் தங்கமே தங்கம்!

மொழி உணர்வுவேணுமடி தங்கமே தங்கம்!- தமிழை

உயிரெனவே போற்றிடுவோம் தங்கமே தங்கம்!

     தமிழர்களின் தன்மானம் தங்கமே தங்கம்!- சூட்டும்

     தமிழ்பெயரில் இருக்குதம்மா தங்கமே தங்கம்!

தூயதமிழ் பெயர்வைப்போம் தங்கமே தங்கம்!- வேற்று

மொழிப் பெயரைக் களைந்திடுவோம் தங்கமே தங்கம்!

     தமிழ்மொழியை வளர்த்திடுவோம் தங்கமே தங்கம்!- தமிழ்

     வளர்ந்தால் நாம் உயர்வோம் தங்கமே தங்கம்!

ஆதவனின் சுடரொளியால் தங்கமே தங்கம்!- உலக

உயிர்கலெல்லாம் வாழுதடி தங்கமே தங்கம்!                                               

     காணும்பொங்கல் வைத்திடுவோம் தங்கமே தங்கம்!- அந்தக்

     கதிரவனை வணங்கிடுவோம் தங்கமே தங்கம்!

மாடுகளின் மகத்துவத்தை தங்கமே தங்கம்!- நாம்

மனம் இருத்தி பொங்கல் வைப்போம் தங்கமே தங்கம்!

     வாழ்க்கையதன்தத்துவத்தை தங்கமே தங்கம்!- தந்த

     வள்ளுவனை வணங்கிடுவோம் தங்கமே தங்கம்!

தை (சுறவம்)பிறந்தால் வழி பிறக்கும் தங்கமே தங்கம்- நம்

துன்பமெல்லாம் பறந்துபோகும் தங்கமே தங்கம்!!!
புத்தாண்டு நமக்கிதுவே தங்கமே தங்கம்  !!
அதைப்புரிந்து கொண்டாடடியோ
தங்கமே தங்கம் !!