சங்கத்தமிழ் அனைத்தும் தாராயோ ?
எங்கும்தமிழ் மணக்கவழி கூறாயோ?
பொங்கும் கதிரவனின் ஒளிக்கதிரே !
எங்கள் தமிழினத்தின் அரும்தலைவா !
வீரமுடன் காதலினை வெற்றியென்று போற்றும்தமிழ்
ஒருவனுக்கு ஒருத்தியென்ற உயர்ந்தநிலை கொண்டதமிழ்
கற்பினுக்குக் கண்ணகியைக் காவியமாய்த் தந்த தமிழ்
வள்ளுவனார் குறளினிலே வாழ்க்கைமுறை சொன்னதமிழ்
கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வந்தமொழி
சங்கத்தமிழ் அனைத்தும் தானென்று நாம்மறந்தோம்
அறம்கூறி பொருள்கூறி இன்பமதைச்சொன்னதெல்லாம்
இன்பத்தமிழ் அனைத்தும் தானென்று ஏன்மறந்தோம்?
அம்மாவென்றழைக்கின்ற அன்புமொழி கேட்கவில்லை
அப்பாவென்றழைக்கின்ற ஆசைமொழி காணவில்லை
தமிழ்ப்பேரை வைக்கின்ற தன்மானம் பெருகவில்லை !
தலைவா !நீ சட்டமொன்றை வைக்காமல் தீர்வுமில்லை
அறிவியலும் பொறியியலும் கற்கத் தோதாய்
அருந்தமிழில் கணினிமொழி ஆக்கம் தந்தால்
உலகமதில் உள்ளவர்கள் வியக்கும் வண்ணம்
செம்மொழித்தமிழனவன் உயர்வான் திண்ணம் !
பலசாதியாய்ப் பிரிந்து வாழ்கின்ற நிலைமாற்றி
தமிழ்பேசும் நாமெல்லாம் ஒருசாதி எனப்போற்றி
சங்கத்தமிழ் அனைத்தும் தாவென்று நெஞ்சினிலே
தமிழ்த்தாயை வணங்கிடுவோம் மாநாட்டுப் பந்தலிலே !!